ஆன்மிகம்

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்


பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முருக பெருமானின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில், கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகமவிதிப்படி கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அதன்படி பழனி முருகன் கோவிலுக்கு கடந்த ஆண்டே கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சில காரணங்களால் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு கும்பாபிஷேக பணிகளை தொடங்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து கும்பாபிஷேகத்துக்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்குவதற்கு முன்பு நடத்தப்படும் பாலாலய பூஜை நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக கோவில் கார்த்திகை மண்டபத்தில் யாக பூஜை நடத்துவதற்காக யாகசாலை அமைக்கப்பட்டது.

பாலாலய பூஜை என்பது கோவில் வளாகத்தில் கும்பம் ஒன்றை வைத்து அதில் மாவிலை, தேங்காயை வைத்து, வேத மந்திரங்கள் ஓதப்படும். அப்போது தெய்வ சக்தி அந்த கும்பத்துக்கு மாறும் என்பது ஐதீகம். பின்னர், அந்த சக்தி மற்றொரு இடத்தில் வைக்கப்பட்டுள்ள மரத்தால் செய்யப்பட்ட உருவத்திற்கு மாற்றப்படும். தொடர்ந்து கும்பாபிஷேகம் முடியும் வரை அந்த மரத்தால் ஆன உருவத்துக்கு பூஜைகள் நடத்தப்படுவதே பாலாலய பூஜை ஆகும்.

பழனி முருகன் கோவில் கார்த்திகை மண்டபத்தில் பாலாலய பூஜையையொட்டி வர்ணம் தீட்டப்பட்டிருக்கும் காட்சி.

அதன்படி பாலாலய பூஜை கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி கார்த்திகை மண்டபத்துக்கு வர்ணம் தீட்டப்பட்ட காட்சியளிக்கிறது. 3 நாட்கள் பூஜை நடைபெறுகிறது.

2-வது நாளான நேற்று காலை 9 மணிக்கு 2-ம் கால யாகபூஜை நடந்தது. பின்னர் 10.30 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்று அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து மாலை 6 மணிக்கு 3-ம் கால யாகபூஜை, இரவு 8 மணிக்கு பூர்ணாகுதி, சிறப்பு தீபாராதனை நடந்தது.

பாலாலய பூஜையின் இறுதி நாளான இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு 4-ம் கால யாகபூஜையும், காலை 7.25 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை, கோபூஜை நடக்கிறது. பின்னர் 9 மணிக்கு கலச புறப்பாடு, பாலாலய பிரவேசம், கலாகர்‌‌ஷண பூஜைக்கு பின்பு மகாதீபாராதனை நடைபெற்று கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்குகிறது. தொடர்ந்து மூலவருக்கு நைவேத்தியம், மகாதீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: