ஜோதிடம்

குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி ராசிபலன் எதுவுமே பலிக்கமாட்டேங்குதா? – இதை படிங்க முதல்ல | Dasa Bhukti effects and Remedies

News

lekhaka-C jeyalakshmi

|

சென்னை: ஒருவரின் சுய ஜாதகத்தில் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் தசாபுத்திக்கு ஏற்ப நல்லதும் கெட்டதும் நடக்கும். அப்போ ராசி பலன் சொல்வது போல நடக்காதா என்று கேட்கலாம். நல்ல தசாபுத்தி சுய ஜாதகம் நன்றாக இருப்பவர்களுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும் சிலர் பணக்காரராக செல்வ செழிப்புடன் இருப்பார்கள். திடீரென பிச்சைக்காரனாக எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்து விடுவார்கள்.. இதெல்லாம் மோசமான திசை வரும் போது வரக்கூடிய நிகழ்வுகள். ஜாதக ரீதியில் ஜாதக கட்டங்களை பார்த்து தனிப்பட்ட சில பரிகாரங்களை செய்து அந்த தசையை யோகமான தசை ஆக மாற்ற முடியும். ஜாதகருக்கு தற்போது எந்த திசை நடப்பதாக இருந்தாலும் முதலில் விநாயக பெருமானை வழிபட்டு பின்பு, எந்த திசை நடக்கிறதோ அந்த திசைக்கேற்ற பரிகாரம் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது போன்றவை நவகிரகங்கள் என்று அழைக்கப்படுகிறது. ஜோதிடத்தின் அடிப்படையில், நவக்கிரகங்களே மனிதர்கள் மீதும், உலகில் நடக்கும் நிகழ்வில் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றன. தசா புத்தி என்பது நவகிரகங்களும் நம்மை ஆட்கொள்ளும் அல்லது ஆட்டிப்படைக்கும் காலம் எனலாம்.

Dasa Bhukti effects and Remedies

இந்த காலம் கிரகத்திற்கு கிரகம் வேறுபடும்.பொதுவாக ஒவ்வொரு கிரகத்திற்க்கும் அதனுடைய திசை காலம் வேறுபடும். இந்த காலம் மனிதனின் ஆயுள் அடிப்படையில் நம் முன்னோர்கள் வகுத்தனர். கேது திசை 7 ஆண்டுகள், சூரிய திசை 6 ஆண்டுகள், சந்திர திசை 10 வருடம், செவ்வாய் திசை 7 ஆண்டுகள், ராகு திசை 18 ஆண்டுகள் குரு திசை 16 ஆண்டுகள் சனி திசை 19 வருடங்கள் புதன் திசை 17 வருடங்கள் என நவ கிரகங்கள் 120 வருடங்கள் மனிதர்களின் ஆயுளை ஆட்சி செய்கின்றன.

இது நவகிரகங்களின் தசா காலம் ஆகும். அனைவருக்கும் ஆரம்ப திசை சூரிய திசையாக இருக்காது. நம்முடைய நட்சத்திரங்களை வைத்து நாம் பிறக்கும் போது என்ன திசை நடந்தது என்று கண்டு பிடிக்கலாம். ஒரு கிரகத்திற்கு 3 நட்சத்திரம் வீதம் மொத்தம் 9 கிரகத்திற்க்கும் 27 நட்சத்திரங்களை பிரித்துள்ளனர். அந்த 3 நட்சத்திரத்திற்கும் அந்த குறிப்பிட்ட கிரகம் தான் அதிபதி.

அஸ்வினி, மகம், மூலம் – கேது

பரணி, பூரம், பூராடம் – சுக்கிரன்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம்- சூரியன்

ரோகிணி, அஸ்தம், திருவோணம்- சந்திரன்

மிருகசீரிஷம்,சித்திரை, அவிட்டம் – செவ்வாய்

திருவாதிரை, சுவாதி, சதயம் – ராகு

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி – குரு

பூசம், அனுஷம், உத்திரட்டாதி – சனி

ஆயில்யம், கேட்டை, ரேவதி – புதன்

ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் சதயம் எனில் அவர்களுக்கு ஆரம்ப திசை ராகு திசை. அதன் பின் குரு திசை,சனி திசை என வரும். எந்த திசை ஆரம்பமோ அதற்கு அடுத்ததில் இருந்து தொடரும். ஒரு சுற்று முடிய 120 வருஷங்கள் ஆகும். இதனால் எல்லாருக்கும் எல்லா திசையும் வாழ்க்கையில் வருவது இல்லை. ஏனெனில் 120 வருடம் வரை நம்மில் பலரும் இப்பூமியில் வாழ போவது இல்லை.

ஒரு வீட்டில் நான்கு பேர் இருக்கிறார்கள் என்றால் 4 பேருக்கும் வெவ்வேறு திசையும், தசாபுத்தியும் நடக்கும். ஜாதகத்துக்கு ஏற்ப அவர்களின் பிறப்பு நட்சத்திற்கு ஏற்ப திசையும், தசாபுத்தியும் மாறுபடும். அந்தவகையில், நமக்கு தற்போது எந்த திசை நடைபெறுகிறது என்பதை ஜாதகப்படி தெரிந்துகொண்டு அதற்கேற்ப தெய்வதை வழிபட்டு வந்தால், நமக்கு ஏற்படும் தடைகளை தகர்ந்து வாழ்வில் முன்னேறலாம்.

இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் சிலருக்கு பிறவி ஜாதகப்படி சில கிரகங்கள் சரியில்லாத இடத்தில் இருந்து பிறப்பு ஜாதக அமைப்பு படி சுமாரான பலன்களை அளித்து கொண்டிருக்கும். அந்த கிரக தசை வரும் போது அந்த தசை காலம் முழுவதுமே கெட்ட பலன்களை, சுமாரான பலன்களையே கொடுக்கும். அந்த தசை நடக்கும் போது கோச்சார ரீதியான ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி ஆகியவை நல்ல இடத்திற்கு வந்தாலும் சுமாரான பலன்கள்தான் நடக்கும். இதனால் தான் நம்மில் பலர் கிரக பெயர்ச்சி பலன்களை படித்துவிட்டு அதுபோல எதுவும் நடக்கவில்லையே என்று புலம்புவார்கள்.

ஒருவரின் நேரம் எப்படி இருக்கிறது என்று அவரின் பிறவி ஜாதகத்தை வைத்து பார்க்க வேண்டும் என்று ராசி பலன் சொல்லும்

அதே சமயத்தில் ஏதாவது ஒரு கிரகம் ஒருவருக்கு ஜாதகப்படி நல்ல இடத்தில் அமைந்து அந்த கிரகத்தின் தசை வரும் போது ராஜவாழ்க்கை தான். அந்த தசை முடியும் வரை அவர் ஜாதகபுத்தகத்தை கையில் எடுக்க வேண்டியதில்லை.

நல்ல தசை நடைபெற்றால் அவருக்கு கோச்சார ரீதியாக வரும் கண்ட சனி, ஏழரை சனி, அட்டம சனி, அட்டம குரு போன்ற கெட்ட பலன்களை கொடுக்கும் பெயர்ச்சி சஞ்சார காலங்களிலும் அவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஜாதகப்படி சிலருக்கு தொடர்ச்சியாகவோ, அல்லது ஒரு குறிப்பிட்ட வயதில் இருந்தோ நல்ல தசை ஆரம்பிக்கும இது சிலருக்கு வாழ்நாள் முழுவதுமோ, வாழ்க்கையில் ஒரு பகுதியாகவோ இந்த நல்ல தசை காலம் இருக்கும்.

ஒருவருக்கு குரு வும், சுக்கிரனும் நல்ல இடத்தில் ஜாதகத்தில் இருந்தால் மட்டுமே இத்தசைகள் வரும் போது ராஜ யோகத்தை கொடுக்கும். இல்லாவிட்டால் குருதிசை வந்தாலும் சுக்கிர தசை வந்தாலும் நல்லது நடக்காது. சிலருக்கு ஜாதகத்தில் குரு, சனி, புதன் கிரகங்கள் நல்ல இடத்தில் இருக்கும். இதனால் குரு திசை 16 வருடம்,சனி தசை 19 வருடம், புதன் திசை 17 வருடம் என ஒருவரின் வாழ்க்கையின் பெரும் பகுதி அரசரைப் போல வாழ்க்கையை கொடுக்கும். பெரும்பாலான பணக்காரர்கள் ஜாதகத்தில் இப்படித்தான் அவரின் ஜாதகப்படி கிரகங்கள் நல்ல இடத்தில் இருந்து அந்த திசையில் நல்ல நிலைமைக்கு கொண்டு செல்லும். ஜாதகருக்கு தற்போது எந்த திசை நடப்பதாக இருந்தாலும் முதலில் விநாயக பெருமானை வழிபட்டு பின்பு, எந்த திசை நடக்கிறதோ அந்த திசைக்கேற்ற பரிகாரம் செய்து பாதிப்பில் இருந்து தப்பலாம்.

கேது திசை நடப்பவர்கள் விநாயக பெருமானை வழிபட்டு வர தடைகள் அகலும். சுக்கிர திசை நடக்கும் போது சக்தி அபிராமி வழிபாடு செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். சூரிய திசை நடக்கும் போது தொடர்ந்து சிவபெருமானை வழிபட்டு வந்தால் பிணிகள் நீங்கும். சந்திர திசை நடக்கும் போது அன்னை பார்வதியை வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும். செவ்வாய் திசை முருகப்பெருமானை வழிபட்டால் முன்னேற்றம் அடையலாம்.

ராகு திசை நடக்கும் போது ராகு காலத்தில் துர்க்கையை வழிபட மனகஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.

வியாழன் திசை நடக்கும் போது தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்ய வாழ்வில் பல நல்ல திருப்பங்களை காணலாம். சனி திசை நடக்கும் காலங்களில் அனுமனை வழிபடுவதால் தடைகள் அனைத்தும் அகலும். புதன் திசை நடக்கும் போது மஹாவிஷ்ணுவை வழிபாடு செய்ய வேண்டும். தொடர்ந்து வழிபட விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

இதைத் தவிர செவ்வாய் திசை, சனி புத்தி நடப்பவர்களும், வியாழ திசை, சுக்ர புத்தி நடப்பவர்கள் அந்த காலத்தில் பைரவர் வழிபாடு, வராஹி வழிபாடு, பிரதோஷ வழிபாட்டினை செய்து வந்தால் இன்னல்கள் நீங்கும். நம்பிக்கையுடன் இறை வழிபாடு செய்து வந்தால் தசா புத்திகளால் ஏற்படும் தடைகள் நீங்கும் பாதிப்புகளும் சரியாகும்.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!
Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close