விளையாட்டு

ஆஸ்திரேலிய அணி 225 ரன்னில் ஆல்-அவுட்


இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 225 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.


லண்டன்,

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தொடக்க நாளில் 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி எஞ்சிய இரு விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சில் 294 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 70 ரன்கள் (7 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் மார்ஷ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 9 மாதங்கள் இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய மிட்செல் மார்சின் சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.

அடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், மார்கஸ் ஹாரிசும் களம் புகுந்தனர். தொடர்ச்சியாக சொதப்பி வரும் வார்னர் இந்த இன்னிங்சிலும் சோபிக்கவில்லை. ஜோப்ரா ஆர்ச்சர் ஆப்-ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தை தேவையில்லாமல் அடித்து விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆனார். வார்னர் 5 ரன்னில் நடையை கட்டினார்.

இந்த தொடரில் வார்னர் இதுவரை 9 இன்னிங்சில் விளையாடி அதில் 8 இன்னிங்சில் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிகமுறை ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்த தொடக்க ஆட்டக்காரர் என்ற மோசமான சாதனை அவரது வசம் ஒட்டிக் கொண்டது. மற்றொரு தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிசும் (3 ரன்) நிலைக்கவில்லை.

பின்னர் மார்னஸ் லபுஸ்சேனும், முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித்தும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். நன்றாக ஆடிய இந்த ஜோடிக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ‘செக்’ வைத்தார். ஸ்கோர் 83 ரன்களை எட்டிய போது லபுஸ்சேன் (48 ரன்) எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த மேத்யூ வேட் 19 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 17 ரன்னிலும், கேப்டன் டிம் பெய்ன் 1 ரன்னிலும், கம்மின்ஸ் ரன் ஏதுமின்றியும் வெளியேறினர். இதனால் மறுபடியும் ஆஸ்திரேலிய அணி நெருக்கடிக்குள்ளானது.

இன்னொரு பக்கம் நங்கூரம் போல் நிலை கொண்டு போராடிய ஸ்டீவன் சுமித் 80 ரன்களில் (145 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) கிறிஸ் வோக்சின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. சுமித் இந்த தொடரில் இதுவரை 750 ரன்கள் குவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி கட்டத்தில் சற்று தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை 200 ரன்களை கடக்க வைத்த நாதன் லயன் 25 ரன்னிலும், பீட்டர் சிடில் 18 ரன்னிலும் ஆர்ச்சரின் வேகத்தில் சிக்கினர்.

முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 68.5 ஓவர்களில் 225 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளும், சாம் குர்ரன் 3 விக்கெட்டுகளும், கிறிஸ் வோக்ஸ் ஒரு விக்கெட்டும் சாய்த்தனர்.

69 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்துள்ளது. 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.


Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: