தமிழகம்

அமெரிக்க ஆர்டரை இந்தியா கைப்பற்ற அரிய வாய்ப்பு! ஏற்றுமதியாளர் கவனம் செலுத்தணும்| Dinamalar

திருப்பூர்:இந்திய ஏற்றுமதியாளர்கள், செயற்கை இழை ஆடை தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தினால், சீனாவிடமிருந்து விடுபடும் அமெரிக்க நாட்டு ஆர்டர்களை எளிதாக கைப்பற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது.
அமெரிக்கா – – சீனா இடையே வர்த்தகப்போர் நடக்கிறது. சீன பொருட்களுக்கு அமெரிக்கா, கூடுதல் இறக்குமதி வரி விதித்துள்ளது.ஆயத்த ஆடைகளும் கூடுதல் வரிவிதிப்பில் இடம்பெறுகின்றன. அதனால், அமெரிக்க சந்தையில், சீன ஆடைகள் விலை அதிகரித்துள்ளது.அதனால், சீனாவுக்கு பதில் ஆடை உற்பத்தி நாடுகளுக்கு ஆர்டர் வழங்க துவங்கியுள்ளனர், அமெரிக்க வர்த்தகர்கள்.
இந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி, அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க தைவான் வியூகம் வகுத்துள்ளது.சீன ஆடை உற்பத்தி நிறுவனங்களை, தங்கள் நாட்டு ஜவுளித்துறையில் முதலீடு செய்ய தைவான் நாடு அழைப்பு விடுத்துள்ளது.முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு, வரிச் சலுகைகள் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. கூடுதல் வரி விதிப்பால், அமெரிக்க சந்தையில் வர்த்தக போட்டிகளை எதிர்கொள்வது சீனாவுக்கு சவாலானதாக மாறியுள்ளது; அதனால், தைவானின் அழைப்புக்கு சீன நிறுவனங்கள் செவிசாய்க்க துவங்கியுள்ளன.
திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:கூடுதல் வரி விதிப்பால், அமெரிக்க சந்தையில் சீன ஆடை இறக்குமதி குறையத்துவங்கியுள்ளது. சீனா இழக்கும் இந்த வர்த்தகம், இந்தியா, வியட்நாம், வங்கதேசம் போன்ற பிற நாடுகளை நோக்கி செல்லத்துவங்கியுள்ளது.செயற்கை நுாலிழை ஆடை தயாரிப்பில் தைவான் சிறப்பிடம் பிடிக்கிறது. வர்த்தகத்தை இழந்து தவிக்கும் சீன நிறுவனங்களை, தங்கள் நாட்டில் முதலீடு செய்ய தைவான் அழைப்புவிடுத்துள்ளது.
25 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யும் சீன நிறுவனங்களுக்கு, 50 சதவீதம் வரி ரீபண்ட் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட சலுகைகளையும் அறிவித்துள்ளது.தைவானில் இருந்து ஏற்றுமதி செய்யும்போது, அமெரிக்காவில் சாதாரண இறக்குமதி வரி மட்டுமே விதிக்கப்படும்.இதன்மூலம், அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை தொடர்ந்து வசப்படுத்தி வைத்துக்கொள்ளலாம் என்பது, சீன நிறுவனங்களின் கணிப்பு.வர்த்தகத்தை தக்கவைப்பதற்காக, அருகாமை நாடான தைவான் நோக்கி நகர, சீன நிறுவனங்கள் தயாராகிவருகின்றன. சீன நிறுவனங்களின் நகர்வால், அமெரிக்காவுக்கான தைவானின் ஆடை ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
நமது நாட்டின், ஆடை உற்பத்தி சார்ந்த அனைத்து கட்டமைப்புகளும் சிறப்பாக உள்ளன.இந்திய ஏற்றுமதியாளர்கள், செயற்கை இழை ஆடை தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தினால், சீனாவிடமிருந்து விடுபடும் அமெரிக்க நாட்டு ஆர்டர்களை எளிதாக கைப்பற்றமுடியும். சீனாவிலிருந்து விலகிச்செல்லும் ஒரு சதவீத ஆர்டரை கைப்பற்றினாலும்கூட, நமது ஆடை ஏற்றுமதி வர்த்தகம் சிறப்பான வளர்ச்சி நிலையை எட்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


Source link

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: